டெல்லி: உலகம் முழுவதும் கரோனா, ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவிவருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துதல், கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுவருகின்றன.
இந்தியாவில் கடந்த வாரம் கரோனா உச்சமடைந்த நிலையில், இந்த வாரம் முதல் கனிசமாக குறைந்துவருகிறது. இதனிடையே 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி ஜனவரி முதல் வாரத்தில் இருந்து 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
இதுவரை 60 விழுக்காடினருக்கும் மேல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில், மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், 15-18 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து, தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சிறார்களுக்கு 2ஆவது டோஸ் தடுப்பூசி
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை செயலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து மாநில அரசுகளுக்கு ராஜேஷ் பூஷன் தடுப்பூசி செலுத்துவது குறித்து கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 15-18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதில் இருந்து இதுவரை 4.66 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒரு மாதத்திற்குள் 63 விழுக்காட்டினருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிறார்களின் முழு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 2ஆவது டோஸ் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எனவே மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 15-18 வயதுக்கு உட்பட்டோருக்கான 2ஆவது தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி திட்டம் இல்லை; சுகாதாரத்துறை