தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் பல வாக்குறுதிகளை வழங்கிவருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
பயிர் கடன் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், பட்டியலினத்தின் கீழ் வரும் 7 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இனி, தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் தேவேந்திரகுல வேளாளர் சகோதர சகோதரிகள், கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. அவர்கள் இனி, பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுவார்கள்.
6 முதல் 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளித்த தமிழ்நாட்டு அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஆதரித்துவந்துள்ளது. அந்த மக்களுடனான எனது சந்திப்பு மறக்க முடியாதது. அப்போது அவர்களின் வருத்தங்களை தெரிவித்தார்கள். பல ஆண்டுகளுக்கு அவை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினார்கள். அவர்களின் பெயரான தேவேந்திர என்பதுடன், எனது பெயரான நரேந்திர என்பதும் ஒத்துப்போகிறது எனக் குறிப்பிட்டேன்.
அவர்களில் ஒருவனாக, அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டவனாக இருக்கிறேன் என்பதை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெயர் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும்" என்றார்.