புதுடெல்லி: கர்நாடக மாநிலம் குடகில் உற்பத்தியாகும் காவிரி நீரானது கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் உயிர் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில், காவிரி நீரை பங்கிடுவதில் தமிழகம் - கர்நாடகம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில், காவிரி நீர் பங்கீடு குறித்த விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவில்லை என்றும் நீர் திறப்பு குறித்த உத்தரவினை கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அதிகாரிகள், தமிழக அதிகாரிகளிடம் மிரட்டும் பானியில் பேசியதாகத் தெரிகிறது. இதனால் கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.
இருப்பினும் கர்நாடக அரசின் போக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு எந்த வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது? என்ற விவரத்தையும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கர்நாடகாவில் போதிய மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லாத சூழல் உருவாகி உள்ளது என தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க அனுமதி கோரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு அளித்த மனு மீதும், ஆணையம் உத்தரவிட்ட நீரின் அளவு போதுமானதல்ல என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதும் காவிரி மேலாண்மை ஆணையம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இந்த உத்தரவின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் இன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி கூடுகிறது. டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் இக்கூட்டம் பிற்பகலில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆணையத்தின் 22வது கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், அதே மாதத்தில் இன்று 23வது கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "நீட்டால் நிகழ்ந்தது தற்கொலை அல்ல.. ஒன்றிய அரசால் செய்யப்பட்ட கொலை" - உதயநிதி ஸ்டாலின்!