கொல்கத்தா : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நந்திகிராம் வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
இதற்கு எதிராக மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கௌசிக் சந்தா விசாரித்து வந்தார்.
இந்நிலையில் நீதிபதி மீது மம்தா பானர்ஜி தரப்பு பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. நீதிபதி பாஜகவுடன் தொடர்பில் உள்ளார், அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்றெல்லாம் கூறினர்.
இதையடுத்து நீதிபதி வழக்கிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் நீதிபதி கௌசிக் சந்தா மீது இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாநிலத்தின் தலைமை நீதிபதிக்கும் மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 7) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி கௌசிக் சந்தா, “இது மம்தா பானர்ஜியின் திட்டமிட்ட அணுகுமுறை” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வி!