பெலகாவி: மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கடந்தாண்டு கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இவர் போட்டியிட்டு வென்ற பெலகாவி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இங்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் சுரேஷ் அங்காடியின் மகள் ஷ்ரத்தா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் சுரேஷின் மனைவி மங்கலாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சுரேஷின் குடும்பத்துக்கு மாநில, மாவட்ட பாஜக தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மங்கலா கூறுகையில், “நான் அவரின் (சுரெஷ் அங்காடி) கனவுகளை நிறைவேற்றும் பொருட்டும், கட்சி மற்றும் தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” என்றார்.
மங்கலா வேட்புமனுவை மார்ச் 29ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சதீஷ் ஜர்ஹிகோலி களம் காண்கிறார். இவரும் மார்ச் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக சதீஷை, கட்சியின் மாநிலத் தலைவர் டிகே சிவக்குமார் அறிவித்தார்.
தொழில்முறை வழக்குரைஞரான சுரேஷ் அங்காடி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். மாவட்ட அளவில் சிறிய சிறிய பொறுப்புகள் வகித்து பின்னர் மத்திய அமைச்சராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.