கரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக, கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் மூடப்பட்டன. பின்னர்,மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், பொருளாதார சூழலை மேம்படுத்துவதற்காகவும் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, சமீபத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்களின் பார்வைக்கு தாஜ்மஹால் திறக்கப்பட்டது. ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த டிக்கெட் சிஸ்டம் கடந்த சில நாள்களாக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகப்படியான டிக்கெட்டுகளை ஒரு சிலர் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, வார இறுதியில் பிற்பகல் இடங்களை புக்கிங் செய்வதில் இத்தகைய குழப்பங்கள் உள்ளன. நேற்று (சனிக்கிழமை) தாஜ்மஹால் பார்க்க 3800 பயணிகள் மட்டுமே வந்த போதிலும், டிக்கெட் இல்லாத காரணத்தால் சோகத்துடன் வீடு திரும்பினர். இந்த டிக்கெட் விற்பனையில் உள்ள தில்லுமுல்லு குறித்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.