உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக பல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை தடுக்கும் நோக்கில், அம்மாநில அரசு மிஷன் சக்தி என்ற திட்டத்தை தொடங்கியது.
இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு பாதுகாப்பு திட்டங்களும், விழிப்புணர்வு பரப்புரைகளும் பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் பிங்க் பேட்ரோல் என்கிற பெண்கள் ரோந்து படையும் பாதுக்காப்புக்காக உள்ளது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களின் பிரச்னைகளை கேட்க பிரத்தியேகமாக ஹெல்ப் டெஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "பெண்கள் பொதுவாக காவல் நிலையங்களுக்குச் செல்வதற்கும், ஆண் காவலர்களிடம் தங்களது பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் தயங்குகிறார்கள்.
இதைக் கருத்தில் கொண்டு, பெண்களின் தயக்கமின்றி பிரச்னைகள் விவரிக்க மாநிலம் முழுவதும் உள்ள 1,535 காவல் நிலையங்களில் ஹெல்ப் டெஸ்க் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்களை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், உ.பி.,யில் கிரைம் எண்ணிக்கை குறைந்த வண்ணம் இல்லை.
இதையும் படிங்க: 'முதலமைச்சர் யோகிக்கு புகைப்படங்கள் எடுக்க மட்டும் நேரம் உள்ளது' - பிரியங்கா காந்தி