திருவனந்தபுரம்: குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை கணவர் நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், மலாவில் பரவூரைச் சேர்ந்த புதுமனா ஷம்சாத், தனது மனைவி ரஹ்மத், இரண்டு குழந்தைகளுடன் பிந்தானி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில், இரண்டு நாள்கள் முன்பு ஷம்சாத்துக்கும், ரஹ்மத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஷம்சாத், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, தனது இரண்டு குழந்தைகளையும் பரவூரிலுள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். ஷம்சாத் பெற்றோர் ரஹ்மத் குழந்தையை விடுவதற்கு வராததால், அக்கம்பக்கத்தினரைத் தொடர்பு கொண்டு ரஹ்மத்தை நேரில் பார்த்து பேசி நிலைமையை கண்டறிய தெரிவித்துள்ளனர்.
அப்போது, வீட்டில் பார்க்கையில் ரஹ்மத் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காவல் துறை நடத்திய விசாரணையில் கணவர் தான் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வடக்கெக்கராவில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஷம்சாத்தை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.