கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாள்கள் முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊடகத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சமூகத்தின் அடித்தட்டு மக்கள், ஆதரவற்றோர் தினசரி தொழிலில் ஈடுபடும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இருக்க மத்திய அரசு நியாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முன்வைத்த நியாய் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தவேண்டிய தருணம் இது.
சமூகத்தில் உள்ள 20 விழுக்காடு மக்களுக்கு குறைந்தபட்ச ஆண்டுவருமான தொகையான ரூ.72,000 உறுதிசெய்கிறது நியாய் திட்டம். இதன்மூலம் ஏழை விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், சிறு, குறு வணிகர்களுக்கு உதவித்தொகையை வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும்" எனக் கோரிக்கைவைத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: கோவாவில் வைராலஜி ஆராய்ச்சி மையம்!