உலக அளவில் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தடம் பதித்து வருகின்றனர். அதிலும் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், விண்வெளி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைக்கின்றனர். இது தவிர ஆண்களுக்கே உரிய பணியான ராணுவத்திலும் பெண்கள் தங்களின் தடத்தை பதிக்கத் தொடங்கி விட்டனர். மேலும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அவர்கள் எப்போதோ நிரூபித்து விட்டனர்.
இதுபோன்ற பல்வேறு துறைகளில் உள்ள பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப பதவிகளையும் வழங்கி அரசு கௌரவித்துவருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய விமானப்படையில் பெண் அலுவலர் ஒருவருக்கு இதுவரை அளித்திடாத பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய விமானப்படையின் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் பிரிவின் பாதுகாப்பு தூதரக துணைப் பிரதிநிதியாக அஞ்சலி சிங் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு தூதரகத்தில் இந்தியா சார்பில் பெண் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
விமானப்படையில் 17 வருட பணி அனுபவம் பெற்றுள்ள அஞ்சலி சிங், மிக் - 29 ரக விமானத்தை இயக்கும் பயிற்சி பெற்றுள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய ராணுவ பாதுகாப்பு துணைப் பிரதிநிதியாக பணியில் சேர்ந்தார். இதுபோன்ற ராணுவ பிரதிநிதிகள் நாட்டின் ராணுவ விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பர்.
பெரும்பாலும் இந்தப் பணிகளில் ஆண் அலுவலர்களே நியமிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது பெண் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு இந்திய விமானப்படை முன்னுதாரணமாக மாறியுள்ளது. இதே போன்று கடற்படையிலும் பெண் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.