புதிய வகை கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயை எதிர்கொள்ளும் வகையில் நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் மாதம் 22ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட ஒருநாள் ஊரடங்கு மறு உருவம் பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, காடுகள் வழியான சாலைகளில் எந்தவொரு வாகனமும் செல்லவில்லை. மனித தலையீடு இல்லை. இதனால் விலங்குகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளன. அடர்ந்த காடுகளில் மறைந்திருக்கும் விலங்குகள், சுதந்திரமாக சுற்றித் திரியத் தொடங்கியுள்ளன.
கேரளாவின் வயநாடு மட்டுமின்றி, நாடு முழுக்க இந்நிலை தொடர்கிறது. மேலும், தற்போது காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் சாலைகள் மற்றும் சாலையோரங்களில் எந்த நேரத்திலும் செல்லலாம். சாலையில் வாகனங்கள் மோதி விலங்குகள் இறக்கும் சம்பவங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
காட்டுக் கரடிகள், யானைகள், மான்கள், மயில்கள் மற்றும் இன்னும் பல வனவிலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. மனிதர்கள் முழு ஊரடங்கில் உள்ள காலங்களை, விலங்குகள் அனுபவிக்கின்றன.
ஆனால், இதில் மனிதர்களுடன் பழகிய குரங்குகளுக்கு மட்டும் சிறு சிக்கல் உள்ளது. அவைகள் உணவின்றித் தவிக்கின்றன. முன்னதாக, இந்த வகை குரங்குகள் சுற்றுலாப் பயணிகள் வழங்கிய உணவை உண்டு வந்தன.
இதன் எதிரொலியை கேரள மாநிலம், வயநாடு உள்ளிட்டப் பகுதிகளில் காணமுடிகிறது. வயநாட்டில் சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், குரங்குகள் நீண்ட காலத்திற்குப் பிறகு, மீண்டும் காட்டுப் பழங்கள் போன்ற உணவைத் தேடும் தங்களுடைய அசல் வாழ்விடங்களுக்குத் திரும்பிவிட்டன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது மிகவும் சாதகமான அறிகுறி என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'இந்தாங்க கரோனா நிவாரண நிதி' - 98 வயது மூதாட்டியின் செயலால் நெகிழ்ந்த அமைச்சர்!