தேசிய தலைநகர் பகுதியில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் காலை நேரங்களில் சாலைகளில் மூடுபனி மிகவும் அதிகளவில் நிலவுகிறது. காலை நேரங்களில் மூடுபனி அதிகமாக உள்ளதால் சாலையில் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரிவதில்லை. குறிப்பாக, டெல்லியின் பாலம் பகுதியில் தெரிவுநிலை(visibility) பூஜ்ஜியத்திற்கு சென்றுள்ளது. இந்த ஆண்டு டெல்லியில் தெரிவுநிலை பூஜ்ஜியத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
சாலையில் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் விமான நிலையங்களிலும் விமானங்கள் வருகையும், புறப்பாடும் தாமதமாகியுள்ளன.
டெல்லியில் தற்போது காற்றின் வேகம் குறைவாக உள்ளதால் பல பகுதிகளிலும் மூடுபனி அதிகமாகவுள்ளது. இது நாளை(டிச.8) சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் தற்போது குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக உள்ளது. காற்றின் திசை மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும்போது வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
டெல்லியில் வெப்பநிலை குறைவாக உள்ளதாலும், காற்றின் வேகம் மிகக் குறைவாக உள்ளதாலும் காற்று மாசு மிக மோசம் என்ற நிலையிலேயே தொடர்கிறது.
காற்றின் தர மதிப்பீடு 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள். அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100வரை இருந்தால் 'திருப்தி' என்றும், 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.
அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் துப்பாக்கிச் சூடு... கைதானவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு?