எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதால், அவர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை வட்டாரங்கள், வரவர ராவிற்கு அளிக்கும் சிகிச்சை குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் தகவலளிக்க மறுத்துவருகின்றனர்.
இதன்காரணமாக, வரவர ராவின் குடும்பத்தினர் அவரது உடல்நிலை குறித்து வெளிப்படையான தகவல்களை அளிக்க வலியுறுத்தி மனித உரிமைகள் ஆணையத்தை நாடியுள்ளனர்.
வரவர ராவிற்கு தேவையான அனைத்து மருத்துவச் சிகிச்சையையும் அளிக்க வலியுறுத்தி மனித உரிமைகள் ஆணையம் கடந்த 13ஆம் தேதி உத்தரவிட்டதாகவும், அதனை மீறும் வகையில் சிறை அலுவலர்கள் செயல்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மருத்துவ சிகிச்சைகள் காரணமாகவும், கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், தனக்கு பிணை வழங்குமாறு 80 வயதான வரவர ராவ் என்ஐஏ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.