டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில், கரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பளம் 30 விழுக்காடு குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு அவசர சட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று நோய் பரவலுக்கு மத்தியில் மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாதச் சம்பளம் 30 விழுக்காடு வரை குறைக்கப்படும் என்று முதலமைச்சர் திரிவேந்திர சிங் அறிவித்தார்.
அதன்படி தற்போது அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அரசாங்க செய்தித் தொடர்பாளரும் மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான மதன் கௌசிக் கூறுகையில், "எம்.எல்.ஏ.க்கள் கோவிட் -19 நிதிக்கு குறைந்த தொகையை வழங்குகிறார்கள் என்று தலைவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனிமேல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரின் பங்களிப்பும் அரசுக்கு இருக்கும்.
இந்தப் பணம் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியிருக்கும் இந்த நடைமுறை அடுத்த நிதியாண்டு வரை தொடரும்” என்றார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் மாதாந்திர சம்பளமாக இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பெறுகின்றனர். அந்த வகையில், 30 விழுக்காடு சம்பள குறைப்புக்கு பின்னர், அவர்களின் கோவிட்-19 நிதி பங்களிப்பு 57 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!