ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக மத்திய பாஜக அரசு பிரித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகள் இந்தியாவின் இச்செயலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பிற்கு ஆரம்பம் முதலே தொடர்ந்து தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் அரசு, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைச் சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதனையடுத்து, இந்தியாவுடனான வர்த்தக மற்றும் வாணிப உறவை முறித்ததாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில், இந்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலையைக் கையாண்டுள்ளது என கூறி அண்டை நாடான சீனாவின் உதவியையும் பாகிஸ்தான் நாடியுள்ளது. தொடர்ந்து உலகின் இசுலாமிய நாடுகள் கூட இந்தியாவின் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவிக்காதது குறித்தும் தனது வருத்தத்தைப் பதிவு செய்தது.
சீனாவின் உதவியை நாடியுள்ள பாகிஸ்தான், அதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. இதற்காகச் சீனா சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கைக்குச் சீன அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை கூட்டச் சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனை ஏற்று இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போலந்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை நடத்துகிறது.