உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டில், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அம்மாநில முன்னாள் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வல்லுறவு செய்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அச்சிறுமி, அவரது உறவினர்கள் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் அவரது உறவினர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குல்தீப் சிங் திட்டமிட்டு செய்தது என்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையாக எழுந்தது. அதனால் பாஜக தலைமை அவரை பதவிநீக்கம் செய்தது. அதையடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சிபிஐக்கு கூடுதலாக 2 வார காலம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சிபிஐ நேற்று பதிவு செய்தது. அதில் சரக்கு லாரியை ஓட்டி வந்த ஆஷிஷ்குமார் கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குல்தீப் சிங் மீதான கொலை முயற்சி புகார் அடிப்படையற்றது என்றும், அன்று நடைபெற்றது எதிர்பாராத தற்செயலான ஒரு சாலை விபத்துதான் என்றும் சிபிஐ முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து குல்தீப் சிங் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொலை நகரமாக உருவெடுத்த உத்தரப் பிரதேசம் - பாஜக மீது அகிலேஷ் குற்றச்சாட்டு!