உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, சட்டமன்ற உறுப்பினரான குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார்.
வழக்கு விசாரணையின்போது டெல்லி சென்ற சிறுமியின் காரை லாரி மோதி உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார். இச்சம்பவம் கொலை முயற்சி என குற்றச்சாட்டு எழவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் சிகிச்சையும் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் சர்மா, குல்தீப் சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.
மேலும், தண்டனைக்கான வாதங்கள் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில் வாதமானது வரும் டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கும் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குல்தீப் செங்கார் கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தின் நகலை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான சஷி சிங் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பிளாஸ்டிக் உபயோகித்த கடைகளுக்கு ரூ.10,000 அபராதம்!