கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளின் கல்வித் திறன், கற்றல் திறன் பெருமளவு பாதிக்கப்படும் என கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கருத்துகளை முன்வைத்துவந்தனர்.
இதையடுத்து, அனைத்து பள்ளிகளும் மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்த முடிவு செய்தன. இந்த இணைய வழிக் கல்வி மாணவர்களின் மனநலன், உடல் நலனை பெரிதளவில் பாதிக்கும் என மீண்டும் பல்வேறு கருத்துகள் எழத் தொடங்கியது மட்டுமல்லாது, ஊரடங்கினால் வருவாய் இழந்து தவித்துவரும் பல்வேறு குடும்பங்கள் பள்ளிகளின் இந்த நடைமுறையால் பாதிப்படையக்கூடும் எனவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இணைய வழிக் கற்றல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு, அதன்படி வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, புதிய கல்வி தொலைக்காட்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி காட்சி மூலம் இந்தியாவின் "டிஜிட்டல் கல்வி 2020" திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்த டிஜிட்டல் கல்வி குறித்த அறிக்கையில், மாணவர்களிடம் பள்ளிகளை எடுத்துச் செல்கிறது. இதன் மூலம் தொலைநிலை கற்றல், அனைவருக்கும் கல்வி ஆகியவற்றை வழங்கபல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிக்ஷா இயங்குதளம், சுயம் பிரபா தொலைக்காட்சி, இணையவழி MOOC படிப்புகள், சிக்ஷா வாணி(வானொலி), மாற்றுத்திறனாளிகளுக்காக NIOS வழங்கும் DAISY, இ-பாத்ஷாலா போன்றவை இதில் அடங்கும்.
திறந்த கல்வி வளங்கள் (என்.ஆர்.ஓ.ஆர்), தொலைக்காட்சிகள், மின் கற்றல் இணையதளங்கள், வெபினார்கள், அரட்டைக் குழுக்கள், புத்தகங்கள் விநியோகம் மற்றும் பிற டிஜிட்டல் முன்முயற்சிகள் மூலம் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மாணவர்களின் கல்விக்கு உதவும்.
இந்த அறிக்கை, பிரதமர் நந்திர மோடி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ சஞ்சய் தோத்ரே மற்றும் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் அனிதா கார்வால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறைகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டது.
இணைய வழிக் கற்றல் மூலம் மாணவர்களுடன் இணைவதற்கு, அனைத்து வகுப்புகளுக்கும் வாட்ஸ்அப் குழு, யூடியூப் சேனல் மூலம் ஆன்லைன் வகுப்புகள், கூகிள் சந்திப்பு, ஸ்கைப் போன்ற சமூக ஊடக கருவிகளைப் பயன்படுத்துவது, மின் கற்றல் போர்டல், தொலைக்காட்சிகள் (தூர்தர்ஷன் மற்றும் பிராந்திய சேனல்கள்), ரேடியோ (ஏ.ஐ.ஆர்), தீக்ஷாவின் பயன்பாடு அனைவரின் தேர்வாக இருந்தது.
இவை, வீட்டிலேயே குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதற்கும் பின்பற்றப்பட்ட புதுமையான வழிமுறைகள் எனத் தெரிவித்தனர். நர்சரி முதல் உயர்நிலை வகுப்புகள் உலகமயமாக்கலின் தற்போதைய சூழலில் டிஜிட்டல் கல்வியின் தரம் ஒரு புதிய அவசியத்தைப் பெற்றுள்ளது.
டிஜிட்டல் கல்வி முயற்சிகள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மேம்பட்ட பயிற்சியினை அளிக்கின்றன. மாநிலத்தில் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கற்றல், பயிற்சி மற்றும் சோதனைக்கான செயல்படும் ஆன்லைன் தளங்கள் செயற்கை நுண்ணறிவை வளர்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.