மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைந்து இன்றுடன் 100 நாள்கள் நிறைவாகிறது. இதனைக் கொண்டாடும்விதமாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி செல்கிறார். அவருடன் ஏராளமான சிவசேனா தொண்டர்களும் அயோத்திக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இதற்காகச் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளித்தன.
கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி மாநிலத்தின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக்கொண்டார். அவரின் ஆட்சி 100 நாள்களை நிறைவுசெய்துள்ள நிலையில் இன்று அயோத்தி செல்கிறார். அங்கு ஸ்ரீ ராமரை தரிசிக்கிறார். எனினும் சரயு நதிக்கரையில் மகா ஆரத்தி எடுத்து அவர் வழிபட மாட்டார்.
கொரோனா வைரஸ் தொடர்பாகச் சுகாதாரத் துறை பொதுமக்கள் அதிகமாகக் கூட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கரே மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், தங்களின் அயோத்தி பயணத்தின்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் வருவார்களா எனக் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த தாக்கரே, “இது அரசியல் நிகழ்ச்சி அல்ல; என்னுடன் வருபவர்கள் வரலாம், கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். இதை அரசியலுடன் முடிச்சுப் போடக் கூடாது” என்றார்.
இதையும் படிங்க : உத்தவ் தாக்கரேவை சமாதானப்படுத்த முயற்சிப்போம் - சரத் பவார்