சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பகவான் கென்பரா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த குழந்தை ஒன்று, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இக்குடும்பத்தினரிடம் ரேஷன் கார்டு இல்லாததால், அரசின் இலவசத் திட்டங்கள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இது குறித்து மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் எஸ்.கே.மர்காம் கூறுகையில், "பசியால் குழந்தை இறந்து விட்டது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. உறுதியான தகவல் கிடைக்காதபோது பசியால் குழந்தை இறந்தது என்ற செய்தியை பரப்புவது சரியில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குழந்தை மரணத்திற்கான சரியான காரணம் தெரிய வரும்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய கிராமத்தின் சர்பஞ்ச் பார்வதி சிங் பேசுகையில், "குடும்பத்தினருக்கு ரேஷன் கார்ட் மற்றும் ஆதார் கார்ட் இல்லை. பிப்ரவரி மாதத்தில் நான் பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து, அந்தக் குடும்பத்தினருக்கு ரேஷன் கார்ட் வாங்கிக் கொடுப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால், பஞ்சாயத்து செயலர் கவனம் செலுத்தாததால் கால தாமதம் ஏற்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அலுவலர்கள் பேசினாலும், இந்தச் சம்பவம் மாநிலத்தில் அரசின் ஊட்டச்சத்து பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.