39ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விக்யான் பவனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மாநில அரசின் எண்ணங்களை கூட்டத்தில் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டிற்கு 2017-2018 ஆம் ஆண்டில் வர வேண்டிய ஐஜிஎஸ்டி தொகை மற்றும் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை விரைந்து விடுவிக்க வேண்டும் என்று ஜெயக்குமார் வலியுறுத்தினார் என்று டெல்லியில் தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சட்டக்குழுவின் பரிந்துரைப்படி ரூ.2 கோடி வரை வர்த்தகம் செய்பவர்கள் அது தொடர்பாக ஆண்டு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக அதன் உச்சவரம்பை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயக்குமார் விடுத்துள்ளார். இதன் மூலம் சிறு குறு வணிகர்கள் பயனடையவார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
"துணி, ஆயத்த ஆடை உள்ளிட்ட ஆயத்த ஆடை மற்றும் உரம் மீதான ஜிஎஸ்டி வரியை 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடு ஆக்குவது என்னும் முடிவு ஏற்புடையது அல்ல. கையால் தயாரிக்கப்படும் தீக்குச்சிக்கு 5% ஜிஎஸ்டி வரி என்றும் எந்திரத்தால் தயாரிக்கப்படும் தீக்குச்சிக்கு 18% வரி என்றும் உள்ளது. இதனை பொதுவாக 12% என சமமாக்கலாம்" என்ற யோசனையையும் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டத்தில் கூறினார்.
மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகள், சிட்பண்ட் சேவைகள், நெல் குற்றுகை, நுண்ணீர் பாசன கருவி, பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் மண்ணெண்ணெய், விவசாய பொருள்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.