தங்கத்தின் மீது மக்களுக்கு நாள்தோறும் மோகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் பலர் தங்களை தங்கத்தால் அலங்கரித்துக் கொள்ளவே அதிகம் ஆசைபடுகின்றனர். இதையறிந்த வியாபாரி ஒருவர் இந்த மோகத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ராஷிக். இனிப்பு கடை வியாபாரியான இவர் ரக்ஷா பந்தனை கொண்டாடும் வகையில் தனது கடையில் புதிய இனிப்பு வகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அந்த இனிப்பு கிலோ ஒன்று ரூ.9ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள் அந்த இனிப்பை வாங்கும் ஆர்வத்தில் ராஷிக் கடைக்கு படையெடுத்துள்ளனர். ஆம், அந்த இனிப்பு சுத்தமான தங்கமுலாம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். சுத்தமான தங்க முலாம் பூசப்பட்ட இந்த இனிப்புகள் 'தங்க இனிப்புகள்' என்ற பெயரில் அவர் விற்பனை செய்து வருகிறார்.
இது குறித்து கடையின் உரிமையாளர் ராஷிக் கூறுகையில், ‘ரக்ஷா பந்தனை வாடிக்கையாளர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்த ‘தங்க இனிப்புகளை’ அறிமுகம் செய்தோம். வாடிக்கையாளர்கள் பலரும் தங்க இனிப்புகளை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்’ என்றார்.