கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகாக அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவு செய்ய பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், முதலமைச்சர் கரோனா நிதிக்கு நிதியுதவி வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி கோவிந்த சாலை பகுதியைச் சேர்ந்த தையல் நாயகி என்ற மூதாட்டி நிவாரணம் கொடுப்பதற்காக சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். இவரது கணவர் உயிரிழந்த பிறகு, தனது ஒரே மகளான ஆரோக்கிய மாதாவுடன் வசித்து வந்துள்ளார். முதுமை காரணமாக சரியாக காது கேட்காத இவர், தொலைக்காட்சிகளில் கரோனாவுக்காக நிதியுதவி அளித்து வருவது குறித்த செய்தியை தனது மகளிடம் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, தனக்கு வரும் முதியோர் தொகை மூவாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு, புதுச்சேரி சட்டப்பேரவையில் இயங்கிவரும் முதலமைச்சர் நிவாரண நிதி பிரிவுக்கு நிதி கொடுத்திட பல்வேறு தடைகளையும் தாண்டி வந்துள்ளார். பின்னர், முதலமைச்சர் அலுவலகத்தில் காசோலையாக அளித்தால் மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வங்கிகளுக்கு இன்று முதல் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் தான் கொண்டுவந்த மூவாயிரம் ரூபாயை முதலமைச்சரிடம் கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் மூதாட்டி திரும்பிச் சென்றார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “மீண்டும் திங்கள்கிழமை அன்று வந்து கொடுப்பேன்" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை