கேரள மாநிலம் கேசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவருக்கு கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த விமலா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்றைய தேதியில் கேரள- கர்நாடக மாநில எல்லைப் பகுதியான தலப்பாடியில் நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக, மணமகன் புஷ்பராஜ் மாநில எல்லையைக் கடந்து செல்வதற்கான அனுமதியைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பித்தும், கேசர்கோடு மாவட்ட நிர்வாகம் அவர் மாநிலம் கடந்து செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
இருந்தபோதிலும், திருமணத்தை தள்ளிவைக்க இரு வீட்டாரும் ஒத்துழைக்காமல் எப்படியேனும் தலப்பாடியில் திருமணத்தை நடத்தவேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர்.
இந்நிலையில், காலை 11 மணிக்கு நடைபெறவிருந்த திருமணத்திற்கு காவல் துறையினர் மீண்டும் அனுமதி மறுத்து, இரு வீட்டாரும் மாநிலம் கடந்து செல்வதற்கான அனுமதியை பிற்பகலில் அளித்தது.
இதையடுத்து, மாலை புஷ்பராஜ் மணமகள் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவில் திருமணம் நடைபெற்றது. பின்னர், மணமக்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்படவேண்டும் என காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தனி ஒருவனாக சைக்கிளில் புறப்பட்ட இளைஞன்: மணக்கோலம்பூண்டு டபுள்ஸில் ரிட்டனான கதை!