உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17ஆம் தேதியோடு ஓய்வுபெறுகிறார். முன்னதாக அவர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு அயோத்தி கோயில்- மசூதி தொடர்பான தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகளின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். வடகிழக்கு இந்தியாவிலிருந்து தேர்வான முதல் தலைமை நீதிபதி இவராவார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி எஸ்.ஏ. பாப்டே
நீதிபதி எஸ்.ஏ. பாப்டே என்று அறியப்படும் சரத் அரவிந்த் பாப்டேதான் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி. 2000ஆவது ஆண்டில் மும்பை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அனுபவமிக்கவர். 63 வயதான இவர், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
நீதிபதி தனஞ்ஜெய யஸ்வந்த் சந்திரசூட்
நாட்டின் தலைமை நீதிபதியாக அதிக காலம் பணியாற்றிய ஒய்.வி. சந்திரசூட்டின் மகனான டி.ஒய். சந்திரசூட், 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஹார்வார்டு கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், மும்பை, அலகாபாத் உயர் நீதிமன்றங்களிலும் பணியாற்றியுள்ளார்.
நீதிபதி அசோக் பூஷண்
நீதிபதி அசோக் பூஷண் 1979ஆம் ஆண்டிலிருந்து தனது வழக்குரைஞர் வாழ்க்கையைத் தொடங்கினார். அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பயிற்சி எடுத்து, அதே நீதிமன்றத்துக்கு 2001ஆம் ஆண்டு நீதிபதியாக உயர்ந்தார்.
இதையடுத்து 2014ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தொடர்கிறார்.
நீதிபதி அப்துல் நசீர்
கர்நாடகா நீதிமன்றத்தில் 1983ஆம் ஆண்டு வழக்குரைஞராக பணியை ஆரம்பித்தார். இவரது 20 ஆண்டுகள் வழக்குரைஞர் வாழ்க்கை 2003ஆம் முடிவுக்கு வந்து கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவருகிறார். முன்னாள் தலைமை நீதிபதி கெகர் அமர்விலும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
இதையும் படிங்க: சகிப்புத்தன்மையும், நல்லிணக்கமும் தொடரட்டும்.!