சுதந்திரப் போராட்ட தியாகிகளுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அவர் உடல் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி புத்த கோயிலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகள் கடந்தாலும் இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணமே இருக்கின்றன.
இந்நிலையில் நேதாஜியின் மகளான அனிதா போஸ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''ஜப்பானில் உள்ளதாக கூறப்படும் நேதாஜியின் சாம்பலை எடுத்து மரபணு பரிசோதனை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக இந்திய அரசும், ஜப்பான் அரசும் உரிய முடிவு எடுக்க வேண்டும். அப்படி செய்தால் நேதாஜி மரணத்தின் மர்மம் விலகிவிடும்.
ஆனால் மத்தியில் ஆண்ட முந்தைய அரசுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. முறையான ஆவணங்களை வகைப்படுத்தி இருந்தால் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இன்றளவும் எழாமல் இருந்திருக்கும். எனவே நேதாஜியின் சாம்பலை மரபணு பரிசோதனைக்கு விரைவில் உட்படுத்த வேண்டும்'' என அவர் கோரிக்கைவைத்துள்ளார்.