கரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக நாடு தழுவிய பொதுஅடைப்பு (லாக்டவுன்) கடந்த இரண்டு மாதங்களாக அமலில் உள்ளது. இதனால் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த பொது அடைப்பு காரணமாக கர்நாடக கோயில்களுக்கு ரூ.600 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்தார். மங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “ஏப்ரல், மே மாதம் நீடித்த பொதுஅடைப்பு காரணமாக கொல்லூர் ஸ்ரீ முகாம்பிகா கோயிலில் மட்டும் ரூ.14 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் இந்து வழிபாட்டு தலங்கள் பலவும் வருமான இழப்பை சந்தித்துள்ளன. அந்த வகையில் ரூ.600 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நெருக்கடி காலங்களில் கோயில்களிலிருந்து அன்னதானங்கள் வழங்கப்பட்டன. தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜூன் ஒன்றாம் தேதி கோயில்கள் திறக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் வருகிற 8ஆம் தேதி முதல் திறக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ஜூன் 19 இல் 18 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்...!