அயோத்தி வழக்கிற்குத் தீர்ப்பு வழங்கிய கையோடு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கொலிஜியம் குழு உறுப்பினராகவும் இருந்த ரஞ்சன் கோகோய் நேற்று ஓய்வு பெற்றார். இதனால், உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் கொலிஜியம் குழுவில், ஒரு இடம் காலியானது.
அந்த இடத்தை நிரப்புவதற்காக, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்னதாக, நீதிபதி ரூமா பால் முதல் பெண் நீதிபதியாக கொலிஜியம் குழுவில் இடம்பெற்று, 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றிருந்தார். தற்போது, பானுமதி 13 வருடங்களுக்குப் பிறகு மற்றொரு பெண் நீதிபதியாக கொலிஜியம் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல முக்கிய வழக்குகளை நேர்மையாகக் கையாண்டு, திறம்பட தீர்ப்புகள் வழங்கிய நீதிபதி பானுமதி யார் என்பதை அறிவோம்...
நீதிபதி பானுமதி யார்?
தர்மபுரி மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த பானுமதி, 1981இல் வழக்கறிஞராக நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். வழக்கறிஞராக பதவியேற்றுக் கொண்ட இவர், அடுத்த ஏழு ஆண்டுகளில் மாவட்ட நீதிபதியாக உயர்ந்தார். கிருஷ்ணகிரி, சேலம், கோவை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றி பல முக்கிய தீர்ப்புகளை வழங்கினார்.
குறிப்பாக, 1997ஆம் ஆண்டு புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பானுமதி இருந்தபோது, பாலியல் வழக்கில் சாமியார் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியதன் மூலம், நீதித் துறையின் கண் இவர் மீது பட்டது. இவர், 2003ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயம் போன்றவற்றிற்குத் தடை, சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை, மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு என பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்கினார்.
படிப்படியாக முன்னேறிய பானுமதி, 2013ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, அடுத்த ஆண்டே உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்த இந்தியாவின் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டின் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார். இதுபோக, இவர் மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
தற்போது, கொலிஜியம் குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ள பானுமதி, அடுத்த ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ஓய்வு பெறுவார். தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக, பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கி, உச்சபட்ச பதவியையும் வகிக்கப்போகும் நீதிபதி பானுமதியை நாமும் வாழ்த்துவோம்!
இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேயின் பின்னணி