கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு துறைகள் கடுமையாக பாதித்தன. இதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. மீட்டெடுப்பு திட்டத்தை துறை வாரியாக வகுத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் மல்லிகார்ஜுனா கார்கே வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தாக்கத்திற்கு முன்னரே, அதாவது கடந்த ஆறு ஆண்டுகளாகவே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிவை சந்தித்துவருகிறது.
பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு முன்னறிவிப்பின்றி அமல்படுத்தப்பட்ட ஊரடங்குதான் காரணம். சுற்றுலா, போக்குவரத்து, சில்லரை வர்த்தகம், உணவகம், கட்டுமானத் துறை போன்றவற்றை மீட்டெடுக்க துறை சார்ந்த திட்டத்தை வகுக்க வேண்டும். பேரிடரை உணராத மத்திய அரசு, பொருளாதாரப் பிரச்னைகளை சரி செய்ய மறுத்துவிட்டது. இது கடந்த வாரம் அறிவித்த திட்டம் மூலம் தெரியவருகிறது.
அதிக கடன் வழங்குவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அரசு நேர்மையற்று இருப்பது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்திருப்பது கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட திட்டம் மூலம் தெரியவருகிறது. இம்மாதிரியான பேரிடர் காலத்தில், நீண்ட ஆலோசனைக்கு பிறகே திட்டம் வகுத்திருக்க வேண்டும்.
சந்தை சரிவை சந்தித்துள்ள நிலையில், ஊக்குவிப்பு திட்டம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க அரசு முயன்றுவருகிறது. இந்த ஊக்குவிப்பு திட்டம் நிலத்தை மட்டுமே சொந்தமாக வைத்துள்ள விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கி, பணக்காரர்களை சுதந்திரமாக நடமாட வைத்துள்ளது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீது அக்கறை காட்டாத அரசின் ஆணவப் போக்கையும் போலித்தன்மையையும் ஊக்குவிப்பு திட்டம் அம்பலப்படுத்தியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே உயர் அலுவலருக்கு கரோனா: மூடப்பட்ட தலைமையகம்!