லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் எட்டு காவலர்களை சுட்டுக்கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக் குழு கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் அறிக்கை சமர்பித்தது. இந்தக் குழு தனது அறிக்கையை அக்டோபர் 16ஆம் தேதியே சமர்பிக்கவேண்டிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், காலஅவகாசம் கோரி, தற்போது அறிக்கையை சமர்பித்துள்ளது.
மூன்றாயிரத்து 500 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையில் 80 மூத்த அலுவலர்கள் உள்ளிட்ட காவலர்களுக்கு விகாஸ் துபேவுடன் நெருங்கிய உறவு இருப்பதாகவும், அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள பிக்ரு கிராமத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவை பிடிக்கச் சென்ற எட்டு காவலர்களை விகாஸ் துபேவும், அவரது கூட்டாளிகளும் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், மத்திய பிரதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே அடுத்த நாளே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பல கேள்விகளை எழுப்பியதை அடுத்து இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:30 ஆண்டுகள்... 62 வழக்குகள்... யார் இந்த விகாஸ் துபே?