நாடு முழுவதும் நடந்த மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் 32 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 17 இடங்களையும், அம்மாநில முதலமைச்சராக இருந்த பவன்குமார் சாம்லிங் சார்ந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 15 இடங்களிலும் வெற்றிபெற்றன.
ஆட்சி அமைக்க 17 இடங்கள் தேவைப்பட்டதால், சிக்கிம் ஜனநாயாக முன்னணி கட்சியால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனால் சுமார் 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக பதவி வகித்த பவன்குமார் சாம்லிங்கால் ஆட்சியை தொடரமுடியாமல் போனது.
24 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத முதலமைச்சர் என்ற பட்டத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றில் அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமை தக்கவைத்தவர் பவன்குமார் சாம்லிங் ஆவார். இவர் 8,539 நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.