புதுச்சேரியில் கேசினோ என்னும் சூதாட்ட கிளப் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கேசினோ மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்ய காவல் துறை அனுமதி அளித்தது. அதன் பின்னர் அரசு இதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி திராவிடர் விடுதலைக் கழகம் தலைமையில் பல்வேறு சமூக அமைப்புகள் இன்று கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த போராட்டம் புதுச்சேரி உருளையன்பேட்டை உள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதையடுத்து, சுதேசி மில் அருகில் இருந்து திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உருளையன்பேட்டை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தபோது போலீசார் தடுப்பு வேலி அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது காவல் துறையினரின் செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து தடுப்பு வேலியை அப்புறப்படுத்தி, முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 161ஆவது பிறந்தநாள் - முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை