நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் பெங்களூரு போதைப் பொருள் மாஃபியா விவகாரத்தில் கன்னட திரை உலகினர், கர்நாடக முக்கிய பிரமுகர்கள் பலர் ஈடுபட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட உயர் போதைப்பொருள்களை பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பெங்களூரு போதைப் பொருள் மாஃபியாவைச் சேர்ந்த வீரேன் கண்ணா, ரவிசங்கர், பெப்பர் சம்பா, ராகுல் டோன்ஸ், நியாஸ் அகமது, ப்ரீத்வி ஷெட்ட ஆகியோரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) இதுவரை கைது செய்துள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து இந்த போதைப்பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு, கர்நாடகாவில் பயன்பாட்டிற்கு விற்கப்பட்ட இந்த போதைப்பொருளை வணிகர்கள், நடிகர்கள், பாடகர்கள் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள், அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கால்ரானிவோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான் தொடர்பில் இருந்ததாக தொழிலதிபர் பிரசாந்த் சம்பர்கி குற்றம் சாட்டியிருந்தார்.
இது கர்நாடக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, "போதைப்பொருள் மாஃபியாவோடு தொடர்பில் இருந்தவர்கள்,
அதை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் எந்தவொரு துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திவாய்ந்த புகழ்பெற்றவராக இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கோடு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் கானை பலர் குற்றச்சாட்டுகின்றனர். அப்படி சொல்பவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அது குறித்து அவரிடம் விசாரணை நடத்தட்டும். ஆனால் ஆதாரமின்று பொய்யாக தேவையின்றி அவர் மீது குற்றம் சாட்டுவது அல்லது அவரது நற்பெயரை கெடுப்பது என்பது சரியல்ல
நான் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் எனது சொத்தை பறிமுதல் செய்து என்னை தூக்கிலிடட்டும் என்று கான் கூறியுள்ளார்.
அவர் போதைப்பொருள் நுகர்வு, விற்பனை அல்லது ஏற்பாடு போன்ற எந்தவொரு வகையிலும் ஈடுபட்டிருந்தாலும் அவரை கைது செய்யுங்கள். ஆதாரம் இல்லாமல் பேசுவதற்கு பதில் அளிக்க முடியாது" என்றார்.
கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் சி.சி.பி. முன் ஆஜராகி கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த சில ரகசியத் தகவல்களை கூறியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டவிரோத குற்ற வர்த்தகத்தில் கன்னட திரை உலகை சேர்ந்த 15 நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) காவல்துறையின் தலைவர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.