மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இந்த வரைவில் மும்மொழிக் கொள்கை அடிப்படையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே தமிழ்நாடு முதல் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த வரைவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமைய்யா மும்மொழி கொள்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர்
புதிய தேசியக் கல்வி கொள்கை வரைவின் அடிப்படையில் இந்திய பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயற்சி செய்வது எங்களின் உணர்வுக்கு எதிரான ஒன்று. கன்னட மொழியே எங்களின் அடையாளம். இந்தியை திணிக்க முயல்வது இந்தி அல்லாத மாநிலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். இந்தி மொழி விருப்பப்பாடமாகவே இருக்க வேண்டுமே தவிர கட்டாய பாடமாக்க முயற்சிப்பது தவறான ஒன்று.
எனவே அதை தவிர்த்துவிட்டு அந்தந்த மாநில அடையாளங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மாநிலங்களின் அடையாளத்தையும் அவர்களின் கலாச்சாரங்கள், தாய் மொழி வாயிலாக வெளிப்படுத்த இடம் அளிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் இந்தியாவில் வாழும் கன்னடர்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.