குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வடகிழக்கு டெல்லியில் வன்முறையில் முடிவடைந்தது. இதில், சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், இது தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது.
வன்முறை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார். அவர் கூறுகையில், "வீட்டை விட்டு வெளியேறி இறுதிவரை போராட்டத்தில் ஈடுபடுங்கள் என பெருமளவு மக்களவை உறுப்பினர்கள் கொண்ட கட்சி (காங்கிரஸ்) ஒன்று தெரிவித்தது. இது உங்களுக்கு வெறுப்புணர்வைப் பரப்பும் விதமாகத் தெரியவில்லையா?
மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். வன்முறையில் சிக்கி உயிரிழந்தோரின் விவரங்களை மத ரீதியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது. அதனை நான் வெளியிட மாட்டேன். அவர்கள் அனைவரும் இந்தியர்களே.
பெரிய மரம் தரையில் வீழ்ந்தால் அதன் தாக்கம் நில அதிர்வாக வெளிப்படும் என சீக்கியர் படுகொலை குறித்த ராஜிவ் காந்தியின் கருத்தை காங்கிரஸ் கட்சிக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். சிறிய காலத்தில் இவ்வளவு பெரிய வன்முறை நடைபெறுவதற்கு திட்டமிட்ட சதியே காரணம். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, குற்றவாளிகளை விட மாட்டோம்" என்றார்.
இதையும் படிங்க: ஜேஎன்யூ தாக்குதலுக்கு காரணம் பாஜக - மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலு குற்றச்சாட்டு