2003ஆம் ஆண்டு சீனாவை கலங்கடித்த கொரோனோ வைரஸ் மீண்டும் சீனாவை மட்டுமல்லாமல் அமெரிக்கா, இந்தியா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளையும் கிறங்கடித்துவருகிறது. கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை சுமார் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்குப் பரவாமல் இருக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
கொரோனோ வைரஸ் மற்ற நாடுகளிலிருந்து பரவுவதைத் தடுக்க சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு முழுப் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஒரு மருத்துவக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொல்கத்தா, டெல்லி, சென்னை, கொச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவில் வாழும் இந்தியப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸின் பாதிப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. நேற்று சவூதியில் வாழும் கேரள செவிலி ஒருவருக்கு இந்த வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், இன்று கேரள மாநிலம் திருச்சூரில், வெளிநாட்டிலிருந்து வந்த ஏழு பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுக்கு திருச்சூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு சுகாதாரத் துறை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விழிப்புணர்வாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏழு நாடுகளில் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொடூர பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனோ வைரஸ் பாம்பு, வௌவால் போன்ற விலங்குகளிடமிருந்து பரவியிருக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற மூலத்தை அறிந்தால்தான் அதற்கான எதிர் மருந்தைக் கண்டறிய முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பாம்புகளிடமிருந்து பரவும் கொரோனா வைரஸ்?