சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பட்மூர் கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள் 2005-06ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக புரட்சி செய்தனர். இதனால் பயங்கரவாதிகள் அக்கிராமத்தை குறிவைத்து தாக்கினர். இதனால் அக்கிராமமே நிலைகுனிந்துபோனது.
மேலும் அங்கிருந்த பள்ளியும் பாதிப்புக்குள்ளானது. இதனால் கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறி வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர். 1964ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவந்த இப்பள்ளி மாவோயிஸ்ட் தாக்குதலால் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில், 2012ஆம் ஆண்டு கிராம மக்கள் மீண்டும் அக்கிராமத்தில் குடியேறியபோதும், குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி அளிக்க முடியாமல் அவர்கள் மிகவும் கவலைக்குள்ளாகினர். இது தொடர்பாக அம்மாநில பள்ளி கல்வித் துறையிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
அவர்களது கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் பள்ளியை மீண்டும் திறக்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று பிஜப்பூர் கிராமத்தின் தலைவர் கெண்டே சோமு, கங்களுரு ஊராட்சி மன்ற தலைவர் மங்கள் ராணா ஆகியோர் பள்ளியை திறந்துவைத்தனர். இதன்மூலம் ஒரு புதிய வாழ்க்கை கிடைத்ததாக அக்கிராம மக்கள் மகிழ்ந்தனர். இதனை குழந்தைகள் பலூன்களை பறக்கவிட்டு கொண்டாடினர்.
இப்பள்ளியில் 52 மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள், உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இது குறித்து கிராம தலைவர் சோமு கூறுகையில், '14 ஆண்டுகள் கழித்து பள்ளி திறக்கப்பட்டது கிராம மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, குழந்தைகள் கல்வி இழந்திருந்தனர். ஆனால், தற்போது பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதால், இக்கிராமத்திற்கு ஒரு புதிய நிலை உருவாகியுள்ளது' என்று தெரிவித்தார்.