ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் காலத்தில் இது நடந்ததால் அவரின் பெயரையும், அந்த நிறுவனத்தை நேரடியாகவோ, முறைமுகமாகவோ கட்டுப்படுத்தியதாக கார்த்தி சிதம்பரம் பெயரையும் இந்த வழக்கில் சிபிஐ சேர்த்தது.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, தலைமறைவாக இருந்தார் என்று கூறப்பட்டுவந்த சிதம்பரத்தை அவர் வீட்டில் வைத்து சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி சிதம்பரம் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது, இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.