டெல்லி: இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்றுமாறு தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவை பெயர் மாற்றத்துக்கு ஏற்ற வகையில் திருத்துமாறு அந்த மனு கோரியிருந்தது. "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்," என அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு கூறுகிறது.
இந்த மனுவை இன்று விசாரிக்கவிருந்த எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க முடியாமல் போனதால் இம்மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
'பாரத்' என்பதே இந்தியாவின் உண்மையான பெயர் என்று தனது மனுவில் கூறியிருந்த மனுதாரர், அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்படுவது விடுதலைக்காக போராடியர்களுக்கு நியாயம் செய்யும் என்றும் இந்திய விழுமியங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
மேலும், இந்தியா எனும் பெயர் 'அடிமைத்தனத்தின் அடையாளம்' என்றும் மனுதாரர் கூறியிருந்தார். 1948ஆம் நடந்த அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையின் கூட்டத்திலும் 'இந்தியா' எனும் பெயருக்கு பதிலாக 'பாரத்', 'இந்துஸ்தான்', 'பாரத் வர்ஷா' உள்ளிட்ட பெயர்கள் வைக்க ஆதரவாக எம். அனந்தசயனம் அய்யங்கர் வாதிட்டதாக அவர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் 'பாரத் சர்கார்', ஓட்டுநர் உரிமத்தில் 'யூனியன் ஆஃப் இந்தியா' என பல பெயர்கள் இருப்பதால், 'பாரத்' என்று சீராக ஒரே பெயர் வைக்க வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.