கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமில்லை என, கடந்த மே 15ஆம் மத்திய அரசு அறிவித்திருந்ததை எதிர்த்து, மருத்துவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே. கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு சரியான முறையில் ஊதியத்தை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான தனிமைப்படுத்தும் வசதிகளை ஏற்பாடு செய்தவற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
மேலும், இதற்கான, உத்தரவை நாளைக்குள் வெளியிடுமாறு உச்ச நீதிமன்ற அமர்வு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், தங்களை ஒரு வாரம் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
தவிர, மருத்துவர்கள், சுகாதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக, மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களும் இதனை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு சரியான ஊதியம், தனிமைப்படுத்துதல் வசதிகளை வழங்குவது குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்திய- சீனா மோதல்: இரண்டு ஒடிசா வீரர்கள் வீர மரணம்!