இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டவுடன் தங்கள் சொந்த ஊர் திரும்ப முயலுவார்கள்.
இதனால் சட்ட ஒழுங்குப் பிரச்னை வர வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
மகாராஷ்டிராவிலுள்ள உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இருப்பிடம், உணவு ஆகியவற்றை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. தற்போது ஆறரை லட்சம் தொழிலாளர்கள் அரசின் இந்த முகாம்களில் தங்கியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 14ஆம் தேதி பாந்த்ரா ரயில் நிலையத்தில் திடீரென்று ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்று கூடியதைச் சுட்டிக்காட்டிய அவர், இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆர்வமாக இருப்பதைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதைக் கருத்தில்கொண்டு அவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குச் சென்று சேர ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வெறுப்புணர்வு வைரஸை பாஜக பரப்புகிறது - சோனியா காந்தி விமர்சனம்