ஹைதராபாத்தை சேர்ந்த பிரவர்னா ரெட்டி (41) என்ற பெண் சரூர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அந்த புகாரில்,மத்திய வர்த்தகம்மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்பார்மா எக்சல் நிறுவனத்தில் தலைவர் பதவியை தன் கணவருக்கு வாங்கி தருவதாக பாஜ பொதுச் செயலாளர் முரளிதர ராவின் உதவியாளரிடம் ரூ.2.17 கோடி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்திட்டு முரளிதர ராவ் பணி நியமன ஆணையை வழங்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பாதிக்கப்பட்டவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும் முரளிதர ராவுடன் நெருக்கமாக உள்ள ஈஸ்வர் ரெட்டியின் மூலமாக இந்த பணம் கைமாறியதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் முரளிதர ராவ் உட்பட 9 பேர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவின்படியே வழக்குப்பதிவு செய்துள்ளதாக சரூர் நகர் காவல் ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழுக்கு முரளிதர ராவ் அளித்த பேட்டியில் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் .