ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழியைத் தவிர்க்க வேண்டும் என்பதே இன்றைய நாளின் தாரக மந்திரமாக உள்ளது. இதில், மத்திய அரசு அளிக்கும் ஒத்துழைப்பு சணல் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வீழ்ந்த தங்களின் துறையை மீட்டெடுக்க உதவும் என சணல் விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள நடியா, பாரகனாஸ் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சணல் தயாரிப்பில் பெரிய அளவில் ஈடுபட்டுவருகின்றனர். சணல் துறையை மீட்டெடுக்கும் வகையில் அத்துறை சந்திக்கும் பிரச்னைகள் குறித்த முழு விவரங்களுடன் கூடிய அறிக்கையை மேற்கு வங்க சணல் ஆணையர் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விவசாயி ரதன் பிஸ்வாஸ் கூறுகையில், "நெகிழியைத் தவிர்த்து சணல் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்தால் நாம் பெரிய அளவில் பயன்பெறுவோம்" என்றார்.
எதிர்காலத்தில் சணல் சார்ந்த பொருள்களை பெரிய அளவில் விற்பனை செய்வதற்கு ஏதுவாகச் சட்டத்தில் பல பரிந்துரைகள் திருத்தங்கள் மேற்கொள்ள இந்த அறிக்கை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சணல் உற்பத்திக்குப் போதுமான தண்ணீர், மேம்படுத்துவதற்கான விதைகள் ஆகியவைக்கு அறிக்கையில் அதிக முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சணல் விவசாயி சுகுமார் மண்டல் கூறுகையில், "சணல் சார்ந்த பொருள்களை நீங்கள் பயன்படுத்தினால், விவசாயிகளான நாங்கள் பயனடைவோம். நெகிழிகள் தீங்கு விளைவிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் பொருள்கள் பயன்படுத்தப்பட்டால் பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு அது பயன்தரும்" என்றார்.
மத்திய மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகளால் சணல் சார்ந்த பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. இது உற்பத்தியை பெருக்க உதவும் என நடியா மாவட்டத்தில் சணல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நெகிழிப் பொருள்கள் சார்ந்த வணிகத்தில் அதிக பேர் ஈடுபடுவதால் அதற்கு முழுவதுமாக தடைவிதிப்பதற்கு மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. நெகிழியால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைக்க ஒரே வழி சணல் சார்ந்த பொருள்களின் தேவையை அதிகரிப்பதுதான்.
இதையும் படிங்க: செங்கலாக பயன்படுத்தப்படும் நெகிழி: மேற்கு வங்க அரசு அலுவலரின் மகத்தான செயல்