கரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக் கூறி, கரோனில் என்ற மருந்தை பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்தது.
ஆனால், கரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு ஒரு நீதிபதி கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்தது. மேலும், ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
இந்நிலையில், கரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
கரோனில் என்ற பெயரை, 1993ஆம் ஆண்டு முதல் தாங்கள் பயன்படுத்திவருவதாகவும் அதனை பதஞ்சலி நிறுவனம் வணிக முத்திரையாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஆருத்ரா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, 'கரோனில்' என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
இதுகுறித்து நீதிமன்றம், "கரோனா காலத்தில், கரோனில் என்ற பெயரை பயன்படுத்த தடை விதித்தால், அது நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என தெரிவித்தது.
மேலும், இதுகுறித்த அடுத்த கட்ட விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதால், மனு தாரர் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தோல்வியை சந்தித்ததா பணமதிப்பிழப்பு நடவடிக்கை? அதிகரிக்கும் போலி ரூபாய் நோட்டுகள்!