உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, பல்லுயிர்ப் பெருக்கம் என்ற கருப்பொருளை முன்வைத்து உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், #WorldEnvironmentDayஇல், நமது பூமியின் வளமான பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம். பூமியைப் பகிர்ந்து கொள்ளும் தாவரங்களும் விலங்கினங்களும் செழித்து வளர நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். வரவிருக்கும் தலைமுறையினருக்கு இன்னும் சிறந்த பூமியை விட்டு செல்வோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், சமீபத்தில் "மன் கி பாத்" வீடியோவில் உரையாடிய மோடி, உலக சுற்றுச்சூழல் தினத்தை குறித்து பேசியிருந்தார். அதில், இயற்கையுடனான அன்றாட உறவை உருவாக்கிக் கொள்ளும் வகையில் மரங்களை நட்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும். நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பறவைகளுக்கு தண்ணீர் எளிதாக கிடைக்க வழி செய்ய மறக்காதீர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.