புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில், தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து மொத்தமாக மீன்களை வாங்கி மீன் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
முன்னதாக ஊரடங்கினால் குறைவான மீன் விற்பனையே நடைபெற்று வந்த நிலையில், தற்போது விசைப்படகுகள், ஃபைபர் படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.
இதன் காரணாக ஊரடங்கில் வேலையிழந்த பல தொழிலாளர்கள், மொத்த வியாபாரிகளிடமிருந்து மீன்களை வாங்கி காராமணிக்குப்பம் சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் வியாபாரிகள் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர், காராமணிக்குப்பம் சாலையில் புதிதாக மீன் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை எனக் கூறி அங்கு மீன் விற்பனை செய்தவர்களை விரட்டியடித்தனர்.
தொடர்ந்து, விரட்டியடிக்கப்பட்ட விற்பனையாளர்கள் எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்து இது குறித்து முறையிட்டனர். அவர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசுவதாகக் கூறி அங்கிருந்து அனைவரையும் அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!