பிகார்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பயணித்த ஹெலிகாப்டர் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி அங்கு பாஜக தலைவர்கள் பரப்புரைப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பிகாரில் 12 தேர்தல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இந்த வதந்திகளுக்கு ரவிசங்கர் பிரசாத் தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அமைச்சர் பாதுகாப்பாக இருக்கிறார். அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டரின் ரோட்டார் பிளேடு பாதிக்கப்பட்டிருந்தது. இதை விமான நிலையத்திலேயே அலுவலர்கள் கண்டறிந்து சரிசெய்து விட்டனர். அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.