உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதனை நிர்வகிக்க அறக்கட்டளை ஒன்றையும் மத்திய அரசே அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன் அடிப்படையில், ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியது.
இதனிடையே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடும் பணிக்காக உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி அமைக்கப்படவுள்ள ராம் மந்திர் அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை தற்போது அனுமதி அளித்துள்ளது.
இந்த அறக்கட்டளைக்கு 'ஸ்ரீராம் ஜனம்பூமி தீரத் க்ஷேத்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கோயிலின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட விரிவான திட்டத்தின் அடிப்படையில் இந்த அறக்கட்டளை செயல்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், 67.7 ஏக்கர் நிலம் அறக்கட்டளையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"ராம ஜென்ம பூமி பிரச்னை தொடர்பான தீர்ப்பு வெளிவந்த பின்னர், இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது அதன் நடைமுறைகளின் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்ட அமைச்சகம், அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டு, பின் அறக்கட்டளை அமைக்கும் வழிமுறைகளை ஆராயவும் அதன் விதிகளை வகுக்கவும் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்த அதே சமயம் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிரதமர் மோடியைச் சந்திக்காதது ஏன்? - உத்தவ் தாக்கரே பதில்