கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி புல்வாமாவின் லெத்புராவில் சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் படை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டு வெடிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி 160 கிலோ மற்றும் 40 கிலோ அளவிலான வெடிப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, அவை காரில் பொருத்தப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. போக்குவரத்திற்கான தடை நீக்கப்பட்டவுடன் வெடி விபத்தை திட்டமிட்டு பயங்கரவாதிகள் நடத்தினர்.
இந்த வழக்கில் 19 பேர் மீது, 13 ஆயிரத்து 800 பக்கங்களுடன் ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், முக்கியக் குற்றம் சாட்டப்பட்ட முகமது உமர் பாரூக் 2016-17 ஆம் ஆண்டில் வெடிபொருள் பயிற்சிக்காக ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை (ஐபி) மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளார்.
மேலும், மூன்று பாகிஸ்தானைச் சேர்ந்த நண்பர்கள், இரண்டு உள்ளூர் நண்பர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்தத் தாக்குதலுக்கு அவர் திட்டமிட்டிருந்தார். வெடிக்கும் பொருள்கள், ஆர்.டி.எக்ஸ், ஜெலட்டின் குச்சிகள் போன்றவை குற்றம் சாட்டப்பட்ட ஷாகிர் பஷீர் என்பவரது வீட்டில் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு நிதியளிப்பதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வங்கிகளிலிருந்து, பயங்கரவாதி மொஹமட் உமரின் கணக்குகளில் சுமார் 10 லட்சம் பாகிஸ்தானிய ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.