புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
சமீபத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் சார்பிலும், இன்று பல்கலைக்கழக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து மாணவர்கள் பேரணியாக பல்கலைக்கழகத்திற்குள் சென்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த அலுவலர் கண்ணன் கோபிநாத் கண்டன உரை ஆற்றினார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மற்றொரு பிரிவினரைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற இடம் அருகே நின்றுகொண்டு இந்திய அரசுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் இருதரப்பும் மோதிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டதால் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - மாணவ, மாணவிகள் போராட்டம்